தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் அதில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

திமுக மதவாத தீய சக்தி என்பதை இந்த தீர்மானம் உறுதி செய்கிறது. இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது எனவும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தில் தீண்டாமை இல்லை எனவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகிறது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் சாதிய பிளவுகள் இருக்கிறது எனவும், தீண்டாமை கடைபிடிக்கிறது என்றும் முதலமைச்சர் கூறுகிறாரா.? அப்படி உறுதி செய்தால் இதுவரை இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்கியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் இந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.