
இந்தியாவில் உள்ள கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவாவில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அந்த வீடியோவில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வரும் ருத்ரேஷை, சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பொதுமக்கள் அனைவர் முன்னிலையிலும் பயங்கரமாக சத்தம் போட்டு உள்ளார்.
மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனை அடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் அமைச்சரை ராஜினாமா செய்யக்கோரி கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அமைச்சர் மருத்துவரிடம் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் தன்னை அவமதித்த அமைச்சர் அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை மருத்துவர் ருத்ரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “என்னை பொது வெளியில் வைத்து அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரானே என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வெறும் ஸ்டூடியோவுக்குள் இருந்து கொண்டு மன்னிப்பு வீடியோ எடுத்து வெளியிடுவதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.