ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படும் இந்திய விமானப்படை தினம், இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பங்கேற்று பார்வையிட்டார்.
ஆனால் விழாவின் முக்கிய அம்சமாக இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவுப்பட்டியல் இப்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய விமானப்படை நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இரவுத் தாக்குதலில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பின்புலமாகக் கொண்டு, விழாவின் உணவுப் பட்டியலில் பாகிஸ்தானில் உள்ள முக்கிய இடங்களின் பெயர்களில் உணவுப் பொருட்களுக்கு பெயரிடப்பட்டிருந்தது.
உதாரணமாக, “ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா”, “ரஃபிகி ராரா மட்டன்”, “சர்கோதா தல் மக்கானி”, “பாலகோட் டிராமிசு” என பட்டியல் நீள்கிறது. இந்த உணவுப் பட்டியல் இணையத்தில் வெளியான முதலே, நெட்டிசன்கள் இதை எடுத்து மீம்ஸ் மற்றும் கருத்துகளுடன் சமூக ஊடகங்களை பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானை நையாண்டி செய்யும் வகையிலும், இந்திய விமானப்படையின் தைரியத்தை போற்றும் விதமாகவும் இந்த மெனு அமைந்திருப்பதை மக்கள் பாராட்டுகின்றனர். விமானப்படை தினம் முற்றிலும் புதிய கோணத்தில் மக்கள் மனதில் பதிந்துள்ளது.
