காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி மிகுந்த உறுதியுடன் முன்னேறி வருவதாகவும், அதன் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தது மிகப்பெரிய ஆதாரமாகும் என தெரிவித்தார்.
மேலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டது, தமிழக மக்களிடம் அவர் கொண்ட அன்பை நன்கு உணர்த்துவதாகவும், இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் என்றும் கூறினார். பிரதமராக மோடி தமிழ் மரபை போற்றுவது, தமிழகத்தின் பெருமையை உலகளவில் எடுத்து செல்லும் முயற்சியாக இருக்கிறது என்றும் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவுகூர்ந்தார். “ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமைப் போலவே, நரேந்திர மோடியும் தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் பிரதமராக இருக்கிறார். அவரை வரவேற்பதும் வாழ்த்துவதும் தமிழர்களின் உரிமையும் கடமையுமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்வில் பங்கேற்றது பாராட்டப்பட வேண்டிய செயல் என தெரிவித்தார். “ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் பிரதமரை வரவேற்றது, பாராளுமன்ற மரபுகளுக்கும், மரியாதைக்கும் இணையான செயலாகும். இது மோடியையும், தமிழையும் ஒரே தளத்தில் பார்ப்பதற்கான உதாரணம்” என்றார்.
