தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதோடு  மட்டுமல்லாமல், முழுமையாக அவற்றை இச்சமூகத்திலிருந்து ஒழித்து  கட்ட முடிவு செய்து அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி பல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து அவற்றை களை எடுக்க தீவிர சோதனையில் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அதை அமல்படுத்தவும் செய்தது.

அதன்படி, ஒரே  வாரத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில்  1,343 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இதுவரை 2,303 கடைகளில் ஆய்வு செய்ததில் 224 கடைகளில் ரூ  4.63 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 63 கடைகள் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக அவற்றின் உரிமம், பதிவு சான்று ஆகியவை ரத்து செய்யப்பட்டு அக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவித்தார்.