தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை கருத்துகள், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திமுக எம்.பி. கனிமொழியும் நயினார் நாகேந்திரனை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாகப் பேசுவதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் அருவருக்கத்தக்க அரசியல் என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பாஜக தரப்பிலிருந்து வரும் இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்கள், அரசியல் நாகரிகத்தைத் தாண்டிச் செல்வதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.