கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டாகம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது ஸ்ரீஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், ஆரியநாடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஸ்ரீஜா கிராம மக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அந்த போஸ்டர்களால் ஸ்ரீஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் ஸ்ரீஜா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஸ்ரீஜாவின் தற்கொலை குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.