இந்தியாவில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) பணியாற்றிய முகேஷ் மண்டல் என்ற 26 வயது வாலிபர், தற்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகக் கூறும் இவர், ரஷ்யாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைப் பயன்படுத்தி அங்கு துப்புரவுப் பணியில் சேர்ந்துள்ளார். இதற்காக அவருக்கு மாதந்தோறும் சுமார் ₹1.1 லட்சம் (1,00,000 ரூபிள்) சம்பளமாக வழங்கப்படுகிறது.

தன்னுடன் வந்த மேலும் 16 இந்தியர்களுடன் தங்கி பணியாற்றி வரும் முகேஷ், தனது நிலை குறித்து நெகிழ்ச்சியான விளக்கம் அளித்துள்ளார்.

“ஒரு இந்தியராக எனக்குப் பணி என்பது தெய்வம்; தெருவைக் கூட்டினாலும் சரி, கழிவறையைச் சுத்தம் செய்தாலும் சரி, அதைச் சிறப்பாகச் செய்வதே எனது கடமை” என்று அவர் தத்துவமாகப் பேசியுள்ளார்.

ஓராண்டு மட்டும் அங்குப் பணியாற்றி கணிசமான தொகையைச் சேமித்துக் கொண்டு மீண்டும் இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ள முகேஷ், பதவி முக்கியமல்ல, வருமானம் தான் முக்கியம் என்பதைத் தனது செயலின் மூலம் நிரூபித்துள்ளார்.