ஷாப்பிங் செய்யும்போது கடைகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காதது மற்றும் கடைக்குள் அலைந்து திரிந்து பொருட்களைத் தேர்வு செய்வதில் ஏற்படும் சோர்வு பலருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. இத்தகைய சிரமத்தைத் தவிர்க்க சீனாவில் பெண் ஒருவர் செய்த விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குள், பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனது மின்சார ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபடி ஆடைகளைத் தேர்வு செய்யும் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண் கடை முழுவதும் ஸ்கூட்டரிலேயே வலம் வந்து தனக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்வு செய்துவிட்டு, பின்னர் பில் கவுண்டருக்குச் சென்று பணத்தைச் செலுத்திவிட்டு அதே ஸ்கூட்டரில் வெளியேறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அடுத்த நாளே அந்தத் துணிக்கடைக்கு ஒரு டெலிவரி ஊழியரும் தனது ஸ்கூட்டரிலேயே கடைக்குள் வந்து பொருட்களை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது உலகின் முதல் “டிரைவ்-இன்” துணிக்கடையாக இருக்கும் போலிருக்கிறது என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், இதுபோன்ற செயல்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடையூறாகவும், கடையின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் அமையும் எனச் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எது எப்படியோ, வாகனத்தை விட்டு இறங்காமலேயே ஷாப்பிங் செய்யும் இந்தப் பெண்ணின் நவீன கால சோம்பேறித்தனம் அல்லது புத்திசாலித்தனம் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
