ரயில் நிலையங்கள் எப்போதுமே மனிதர்களின் எதிர்பார்ப்புகளாலும், பிரிவுகளாலும், கண்ணீராலும் நிரம்பிய ஒரு விசித்திர உலகம். அங்கு ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு இலக்கை நோக்கித் தன் சுமையோடும் சுற்றத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண நாளில் தான், ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகாவீர்ஜி ரயில் நிலையத்தில் யாருமே கற்பனை செய்து பார்க்காத ஒரு நிஜ த்ரில்லர் காட்சி அரங்கேறியது.
கோட்டாவிலிருந்து வந்த கோட்டா – ஹசரத் நிஜாமுதீன் ஜன் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து ஒரு பெண் பயணி தனது உடைமைகளோடு நம்பிக்கையோடு இறங்கினார். ஆனால், அடுத்த நொடியே அவரது உலகம் உறைந்துபோனது!
கூட்டத்தில் ஒளிந்திருந்த ஒரு குறும்புக்காரக் குரங்கு, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அப்பெண்ணின் கையிலிருந்த கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓடியது. அந்தப் பைக்குள் ஏதோ சுவையான திண்பண்டம் இருக்கும் என்று நம்பிய குரங்கு, அதைத் தூக்கிக்கொண்டு பாதசாரிகள் மேம்பாலத்தின் (Overbridge) உயரமான உலோகக் கூரையின் மீது சென்று அமர்ந்தது.
அந்தப் பையில் இருந்தது வெறும் காகிதங்கள் அல்ல… அப்பெண்ணின் வியர்வைச் சிந்திய உழைப்பின் பலனான ₹40,000 ரொக்கப் பணம்!
உயரமான கூரையின் மீது அமர்ந்து, பசியோடு பையைத் திறந்த குரங்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் தின்பண்டங்கள் எதுவும் இல்லை; மாறாகக் கட்டுகட்டாக ₹500 மற்றும் ₹200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன.
உண்ண முடியாத அந்தக் காகிதங்கள் மீது கோபமடைந்ததோ என்னவோ, அல்லது வானத்திலிருந்து மழை பொழிவது போல விளையாட நினைத்ததோ தெரியவில்லை… குரங்கு தன் கைகளால் அந்த ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து காற்றில் வீசியெறியத் தொடங்கியது!
வானத்திலிருந்து பணத்தாள்கள் மழையாகப் பொழிவதைக் கண்டதும், கீழே நின்று கொண்டிருந்த பயணிகள் திகைத்துப்போனார்கள். “ஐயோ… என் பணம்!” என்று அந்தப் பெண் கதறிய குரல், அந்த நள்ளிரவு ரயில் நிலையத்தின் கூரையை முட்டியது.
இன்றைய சுயநல உலகில், சாலையில் பணம் சிதறிக் கிடந்தால் ஆளாளுக்கு அள்ளிச் செல்வார்கள் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், அங்கே நடந்ததோ வேறு ஒரு அற்புதம்!
காற்றில் பறந்து நாலாபுறமும் சிதறிய பணத்தாள்களைக் கண்டதும், அங்கே நின்றிருந்த பயணிகளும், ரயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசாரும், ஊழியர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடினர். ஆனால், தங்களுக்குச் சொந்தமாக்க அல்ல… அந்த ஏழைப் பெண்ணின் கண்ணீரைக் துடைப்பதற்காக!
ஒவ்வொரு நோட்டாகப் பொறுக்கி, தூசி தட்டி, அவசர அவசரமாகச் சேகரித்தனர். சில நிமிடங்களிலேயே காற்றில் சிதறிய பெரும்பாலான நோட்டுகள் ஒன்று சேர்க்கப்பட்டன.
மொத்தமிருந்த ₹40,000-ல், ₹39,000 ரொக்கப் பணம் பத்திரமாக மீட்கப்பட்டு, அந்தப் பெண்ணின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது! வெறும் ₹1,000 மட்டுமே மீட்க முடியாமல் போனது. கண்ணீர்மல்கத் தனக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும், ரயில்வே போலீசாருக்கும் அந்தப் பெண் நெஞ்சார நன்றி தெரிவித்தார்.
कोटा रेल मंडल के श्री महावीर जी स्टेशन पर एक बंदर जनशताब्दी एक्सप्रेस से उतरी महिला यात्री कैलाशी कोड़िया का पर्स छीनकर फुटओवर ब्रिज पर चढ़ गया. खाने का सामान समझकर बंदर ने पर्स में रखे ₹40,000 हवा में उड़ा दिए. pic.twitter.com/BrGE0RgXeh
— Vicky Pratyax Singh Rathore (@VickyPratyax25) September 3, 2026
“>
விலங்கின் அறியாமையால் தொடங்கிய ஒரு சிறிய விபரீதம், மனிதர்களின் ஒற்றுமையாலும் மனிதநேயத்தாலும் ஒரு அழகான காவியமாக முடிவடைந்துள்ளது. சுயநலம் மட்டுமே நிறைந்த உலகம் என்று நாம் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆபத்தில் இருக்கும் ஒரு சாமானியப் பெண்ணுக்கு உதவ ஓடிவந்த அந்த அந்நிய மனிதர்களின் உள்ளம் தான், இந்தச் சம்பவத்தின் உண்மையான கதாநாயகன்!
குரங்கு வீசியது வெறும் பணத்தாள்களை அல்ல… மனிதர்களின் மனதில் இன்னமும் ஈரம் வற்றவில்லை என்ற நம்பிக்கையைத் தான்!
