உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் பகுதியைச் சேர்ந்த அக்‌ஷய் (36) என்பவர் தனது மனைவி ரூபி (28) உடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ரூபிக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவந்ததையடுத்து, கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அக்‌ஷய், ஒரு நாள் வேலைக்குச் செல்கிறதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, மனைவி தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அவர் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரூபியை கண்டித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால் இதன்பிறகும் ரூபியின் கள்ளக்காதல் தொடர்ந்ததாகவும், கணவன் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரை தீர்த்துக்கட்ட ரூபி தனது கள்ளக்காதலன் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி, அக்‌ஷயை கொலை செய்த அவர்கள், தடயங்களை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, சில உடல் பாகங்களைச் சிதைக்க கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர், உடல் பாகங்களை சிறு பொட்டலங்களாக கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.

அக்‌ஷய் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரூபியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ரூபி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கொலையில் உதவியதாகக் கூறப்படும் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காசியாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.