நாம்தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக நிலத்தில் நாம்  வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள் வீதியில் நின்று போராடினார்கள். எவ்வளவு புரட்சிகரமான போராட்டம் ? என்பது கற்றறிந்த இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அம்மாவிடம் கேட்டேன். என்னமா ஓட்டுக்கு 500 ரூபாய். அதை வச்சு என்ன செஞ்ச ?  அஞ்சு நாள் சாப்பிட்டோம். பிறகு ஐந்து வருடம் பட்டினியா கிடைப்பியே அம்மா.  அதை ஏன் யோசிக்கவில்லை ? என்றால், தலையை சொரியுது. கற்றுக் கொடுக்க எவருமில்லை. கற்றவர்கள் விலகி நின்றதால்…  மற்றவர்கள் நிற்பதால்..  நல்லவர்கள் விலகி இருப்பதால் கயவர்கள் நிறைத்து விடுகிறார்கள்.

அரசியலின் புனிதம் கெட்டுவிடுகிறது. அரசியல் தூய உள்ளதோடு உண்மையும்,  நேர்மையுமாக மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரு புனிதமான அமைப்பு என்பது மாறி, பாதுகாப்பாக திருடுகின்ற…  கொள்ளை அடிக்கின்ற ஒரு பாதுகாப்பான இடம் என்று மாறி நிற்கின்றது. மாற்றப்பட்டு இருக்கிறது. அதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நிவாரணத் தொகை ஒரு ஏமாற்று, வழங்க மாட்டார்கள். ஆனால் பரந்தூரில் 40,000 கோடிக்கு வானூர்தி நிலையம் கட்டுவார்கள்.

அன்னூரில் 3,000 ஏக்கரில் சிப்காட் கட்டுவார்கள். பல சிப்காட் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. காரணம் வளர்ச்சி. பல தொழிற்சாலைகள் இருந்தும் எங்களின் வளர்ச்சி என்ன ? ரேஷன் கடையில் இலவசமாக அரிசி போட்டால் தான் அதை வாங்கி சாப்பிட்டு  உயிர்பிழைக்க முடியும் என்கின்ற ஏழ்மையில் வறுமை நிலையில் நிற்கிறோம்.   இதுதான் இவர்கள் கட்டமைத்த வளர்ச்சி என தெரிவித்தார்.