நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் அபி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கோவை மருதமலை கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்கு அபி அனுப்பி வைக்கப்பட்டார். விழா முடிந்து பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற 20 போலீசார் ஒரே வாகனத்தில் மீண்டும் நீலகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டரிடம் அபி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அமைதியாக இருக்குமாறு சப்- இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

அதனையும் ஏற்காமல் அபி மதுபோதையில் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் அவர் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை அங்கிருந்து சக போலீஸ்காரர்கள் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். மேலும் வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அபிகை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.