கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தால் கிரிப்டோ கரன்சி மூலம் அதனை இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். மேலும் அந்த நிறுவனத்திற்கு சீனிவாசன், நந்தகுமார், பிரகாஷ், சங்கர் வேலன் ஆகியோரை முகவர்களாக அருண்குமார் நியமித்தார். இதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் அருண்குமார், சீனிவாசன், பிரகாஷ், சங்கர், நந்தகுமார், வேலன் ஆகியோர் சுமார் 438 பேரிடம் இருந்து 37 கோடி ரூபாய் மோசடி செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சீனிவாசன் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நேற்று கிருஷ்ண வேப்பனப்பள்ளி பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அருண்குமாரை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகை, சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.