திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு மீனவன் குளத்தில் ஜெயராஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேன் டிரைவரான ஜெயராஜாவுக்கும், கல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஜெயராஜா வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் வெளியே சென்ற ஜெயராஜா மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து தூங்கினார். சிறிது நேரம் கழித்து ஜெயராஜா மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்பனா உறவினர்களின் உதவியுடன் அவரை களக்காடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜெயராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயராஜா மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.