சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதராக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்தனர். இந்நிலையில் கலைவாணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் வைத்து திருமணம் செய்யவும் தயாராகி வந்துள்ளார்.

பின்னர் போலீசாரின் உதவியுடன் கலைவாணி தனது காதலன் ராஜை கையும் களவுமாக பிடித்தார். அவர்களது பெற்றோரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளனர். இதற்கு இடையே கலைவாணியை திருமணம் செய்து கொள்வதாக ராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் காவல் நிலையம் அருகிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.