கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் செல்வி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் மின்னஞ்சலுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், அதன் ஒரு லிட்டர் விலை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த மருந்தை வாங்கி சப்-டீலராக விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பி செல்வி அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் மருந்து எதுவும் கொடுக்காததால் செல்வி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் நைஜீரியாவை சேர்ந்த சின்னாசா(32), உச்சே ஜான் இமேகா(47), காட்வின் இம்மானுவேல்(42) எப்போசி ஆகியோர் மராட்டிய மாநிலத்தில் தங்கி இருந்து செல்வியிடம் மோசடி செய்து தெரியவந்தது. இதனால் போலீசார் 4 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.