கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து 30 நாட்களில் 1 1/2 லட்சமாக அதனை திருப்பித் தருவதாக தெரிவித்தார்.

பின்னர் தாமரைச்செல்வி பணத்தை கொடுத்தவுடன் கூறியபடி செல்வராணி 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இதனையடுத்து தான் பெரிய அளவில் வியாபாரம் செய்வதாகவும், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் எனவும் செல்வராணி கூறினார்.

இதனை நம்பி தாமரைச்செல்வி முதலில் 20 லட்சம் ரூபாயையும், பின்னர் தனது வீட்டை அடகு வைத்து 15 லட்சம் ரூபாயையும் செல்வராணியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் செல்வராணி பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து தாமரைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 35 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த செல்வராணி மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.