விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தைப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். முதல் விருப்ப மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸிடம் வழங்கினார்.

பாமகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சிப் பூசல் காரணமாகத் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. அன்புமணி தரப்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு தங்களது பலத்தைக் காட்டத் தனித்துச் செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருப்ப மனு விநியோகத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸிடம், விசிக தலைவர் திருமாவளவன் இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தற்போது நன்றாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமதாஸின் இந்தச் சூசகமான பதில், அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறுபுறம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பாமகவுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக யாருடைய கைவசம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தல் களம் இரு தரப்பிற்கும் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ராமதாஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க முழு சக்தியையும் திரட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராமதாஸ் எடுக்கப்போகும் இறுதி முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.