நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதற்கு இலங்கைக்கு எதிராக எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இது நடக்கவில்லை என்றால், அவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணி நேற்று இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது.

இந்தியா தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்த நிலையில் நான்காவது அணி எது என்ற கேள்வி எழுந்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது என்றே சொல்லலாம் ஏனெனில் நாளை இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அது கிட்டத்தட்ட சாத்தியமானது கிடையாது. எனவே 99 சதவீதம் நியூசிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். குசல் பெரேராவின் அபாரமான இன்னிங்ஸ் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தாலும், இலங்கை அணி ஸ்கோரை 171 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து 23.2 ஓவரில் இலக்கை எட்டியது.

ஆடுகளம் குறித்து எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை :

வெற்றிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், இன்று (நேற்று) எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. ஆரம்ப ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர், பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டத்தின் அதே ஆடுகளமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் எங்களுக்கு அது உறுதியாகத் தெரியவில்லை என்றார்..

இந்தியாவுடனான போட்டி சிறப்பானதாக இருக்கும் :

கேன் வில்லியம்சன் மேலும் கூறுகையில், இலங்கை அணி சிறப்பாக செயல்பட முடியும் என்பது எங்களுக்கு தெரியும். பெரேரா இன்று நன்றாக பேட்டிங் செய்தார், ஆனால் அவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தனர். அரையிறுதியில் விளையாடுவது நல்ல விஷயம்தான், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. அரையிறுதிக்கு முன்னேறினால் நன்றாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும், அது எங்களுக்கு முக்கியமான போட்டியாக இருக்கும்.இந்தியாவை அரையிறுதியில் விளையாடுவது எங்களுக்கு சவாலாக இருக்கும், அது ஒரு அணியாக எங்களை சோதிக்கும் என்று கூறினார்..