ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக  தண்டுக்காரன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றார். மேலும் அந்த பேருந்து நிறுத்தத்தில் காளியம்மாள்(60), மஞ்சுளா(38), ரங்கன் (52) ஆகியோரும் புளியம்பட்டி செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர். அப்போது சக்தி-திருப்பூர் சாலையில் திருப்பூரை நோக்கி வந்த காரில் திருப்பூரைச் சேர்ந்த கணேஷ்பிரதீப், அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர்.

இவருடைய கார் தண்டுக்காரன்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வரும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின் சாலையோரம் 2 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது.  அதன் மீது மோதிய கார் நிற்காமல், பேருந்துக்காக காத்து நின்ற பாப்பாத்தி, காளியம்மாள், மஞ்சுளா மற்றும் ரங்கன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அங்கிருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் பாப்பாத்தி சம்பவ இடத்தில் பலியானார். அங்கு நின்றிருந்த மற்ற மூவரும், காரின் உள்ளே இருந்த கணேஷ்பிரதீப்பின் 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.