தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரது தோட்டங்களும் அருகருகே உள்ளது. எனவே அதற்கு இடையிலுள்ள வரப்பில் நேற்று கண்ணன் கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அவரது மகன் செல்வக்குமார் மற்றும் மனைவி ராஜேஸ்வரியும் இருந்ததாக கூறப்படுகிறது. பின் அங்கு வந்த சுப்புராஜ் கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கண்ணன் ஆத்திரமடைந்துள்ளார். உடனே அங்கிருந்த அரிவாளால் சுப்புராஜை வெட்டியுள்ளார். இதனையடுத்து சுப்புராஜ் தப்பி ஓடிய போதும்  அவரை விடாமல் துரத்தி சென்று கண்ணன் வெட்டியுள்ளார். பின்னர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கண்ணன், அவரது மனைவி ராஜேஸ்வவி, மகன் செல்வகுமார் மூவரும் தப்பித்து  ஓடி தலைமறைவாகியுள்ளனர். எனவே இது குறித்த வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின் தலைமறைவாகவுள்ள 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.