திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருவண்ணாமலையில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 24, 25, 26 ஆம் தேதிகளில் மட்டும் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு அறைக்கு 1000 முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் தீப திருவிழா முக்கிய விசேஷ நாட்களான 24, 25, 26 ஆகிய தேதிகளில் 10 முதல் 15 மடங்கு தங்கம் விடுதிகளுக்கு ஏற்றார் போல கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக 1500-க்கு வழங்கும் ஒரு ஏசி அறைக்கு 8000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.