தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தமிழகம் கல்வி, அறிவுத்திறன், தொழில் வளர்ச்சி மற்றும் அனைவருக்குமான சமூக வளர்ச்சி போன்றவற்றில் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகம் மத சார்பற்ற மாநிலமாகவும், சமூக நீதி நிறைந்த மண்ணாகவும் இருக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நம்மிடையே வெறுப்பை தூண்டி நம்மை பிளவுபடுத்தும் சாதிய மற்றும் மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கக் கூடாது. மொழி மற்றும் இனத்தால் எப்போதும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும். அதன் பிறகு இன்றைய இளைய சமுதாயம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உயர்ந்த லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும். படிப்பை திசை திருப்பும் கெட்ட பழக்கங்களுக்கு யாரும் அடிமையாகக் கூடாது. இளைய சமுதாயத்தின் மூலமாகவே இணையற்ற மாநிலத்தை உருவாக்க முடியும் என்பதால் போதை பொருள்களுக்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது. மேலும் புத்தாண்டு பிறந்துள்ளதால் கடந்த வருடத்தை போல இந்த வருடமும் அனைவருக்கும் வசந்த காலமாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.