பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் இருக்கும் அகத்தியர் தெருவை சேர்ந்த அலமேலு என்ற எழுபது வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அவரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக சென்று விட்டனர். இதனால் மூதாட்டி அவரின் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மதியம் 3.15 மணியளவில் நைட்டி அடைந்து கொண்டு ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி இருக்கின்றார்.

அவர் கதவை திறந்த போது அந்த நபர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மூதாட்டியின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்ததோடு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தார். இதை அறிந்த மூதாட்டி அந்த நபரை கட்டிப்பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தார்கள். உடனடியாக மூதாட்டியை அந்த நபர் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். அப்போது தான் தெரிந்தது நைட்டி அணிந்து வந்தது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பது. இது பற்றி அன்னதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.