ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு ஆவணத்தில் புறம்போக்கு நிலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ரத்து செய்து தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என சகாதேவன் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மாவட்ட  ஆட்சியருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி அந்த நிலத்தை லோகபிள்ளையின் வாரிசு தாரர்களுக்கு பட்டா மாற்றம் செய்து தர அப்போதைய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து நில அளவையர் மற்றும் வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்த பின்னர், பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு ஆற்காடு தாசில்தார் சுரேஷ் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.15 ஆயிரம் மட்டும் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர முடியாத நிலையில் சகாதேவன் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி, ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.15 ஆயிரத்தை சகாதேவனிடம் போலீசார் கொடுத்துள்ளனர். பின்னர் சகாதேவன் அந்த பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தபோது,  அவர் அதனை தனது ஜீப் டிரைவர் பார்த்திபனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். உடனே டிரைவர் பார்த்திபனிடம் பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக சிக்கினார். மேலும் இதுகுறித்து  லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.