செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, பாஜக கூட்டணி முறிவு குறித்து பொதுச்செயலாளர் கருத்தை தான் தெளிவாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  ஏற்கனவே சொன்னது போல இது ஒரு ஜனநாயக அமைப்பு. ஜனநாயக அமைப்பு உள்ள இயக்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தான் இந்த கருத்தை சொல்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எங்களோடு வருவார்கள் இனி போகப்போக போகப் போக தெரியும். ஏன் என்று சொன்னால் ? அதற்காகத்தான் திரு.ஸ்டாலின் அவர்களும்,  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உளறிக் கொண்டிருக்கிறார்கள்,  பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி வாபஸ் என்று வந்த உடனேயே அவர்களின் கூட்டணி கட்சியினுடைய முன்னணி தலைவர் மற்ற கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகள் அனைத்தையும் அழைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி என்று சொன்னால் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. கூட்டணியை பொறுத்தவரையில் இது கொள்கை அடிப்படையிலே செயல்படுகின்ற கூட்டணி அல்ல. தேர்தல் காலத்திலே வருகின்ற கூட்டணி. ஏற்கனவே அங்க இருக்கின்ற காங்கிரஸ் எங்களோடு கூட்டணியில் இருந்துள்ளது.  கம்யூனிஸ்ட் எங்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறது. இப்படி எங்களோடு கூட்டணியில் இருந்தவர்கள் தான் இப்போது அங்கே இருக்கிறார்கள். அங்கே இருக்கிற கூட்டணி சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படியும் மாறலாம். அப்படி மாறுகின்றபோது யார் யார் வருவார்கள் என்பது காலம்தான் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.