தஞ்சாவூர் பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் தேர்தல் நாளில் திமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்தச் சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரான இயக்குநர் சேரன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, விஜய் ரசிகர் என்று கூறிக்கொண்ட இணையவாசி ஒருவர் சேரனை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சேரன், “உன் அம்மாவைக் கருதி நான் உன்னைத் திருப்பித் திட்ட மாட்டேன். நாங்கள் காசுக்காக மாரடிக்கும் கூட்டம் அல்ல, சட்டப்படி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியலை விமர்சித்ததற்காகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வந்து அநாகரிகமாகப் பேசும் நபர்களைச் சாடிய சேரன், “நான் திமுக என்று உன்னிடம் எந்த அறிவாளி சொன்னது?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இணையத்தில் இந்த விவாதம் எல்லை மீறிச் சென்றதைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தை தற்போது லாக் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நிலையில், பாபநாசம் வேட்பாளர் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் இடையே நிலவும் இந்த மோதலும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.