ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய போது  இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டது.

அந்த ஏவுகணை தற்போது பஞ்சாபின் அமிர்தசரசில் செயலிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய அரசு பாகிஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று கூறியுள்ளது. அதோடு காவல்துறையினர் வார விடுமுறை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு பஞ்சாபில் அமைந்துள்ள பெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தானியர் ஒருவர் எல்லையை கடக்க முயன்ற போது இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.