ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆடி 18 விழாவினை முன்னிட்டு நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்து காவேரி ஆற்று படித்துறையில் விசேஷ ஹோம பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் வயதான தம்பதியினருக்கு பாதை பூஜை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் ஒன்று அல்லது இரண்டு கொலைகள் நடைபெறுகிறது.
இதற்கு கஞ்சா, போதை பொருட்கள்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா பெண்களுக்கும் ரூ.1000 தருவதாக கூறினர். ஆனால் தரவில்லை. தேர்தல் வர உள்ளதால் இந்த ஆண்டு பணம் தருவார்கள். அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியை மேடையில் எம் பி, எம் எல் ஏ ஒருமையில் பேசி மோதிய சம்பவம் அவர்களின் உள்கட்சியில் குழப்பம் இருக்கிறதை காட்டுகிறது. அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களின் கட்சி மட்டும் அல்ல கூட்டணியில் கூட ஒற்றுமை கிடையாது.
ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறினர். ஆனால் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் கிட்னி விற்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதையடுத்து அவரிடம் அதிமுகவிடம் அதிக எண்ணிக்கையில் தொகுதி கேட்கப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர் எங்களின் நோக்கம் திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான். அதில் யாருக்கு எத்தனை சீட்டு என்பது முக்கியமில்லை என்று தெரிவித்தார்.
