சத்திரபதி சம்பாஜிநகர் ரயில் நிலைய பலகை அருகே பொதுவெளியில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், 22 வயது இளைஞர் மகேஷ் ஆதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 30 அன்று நண்பருடன் சென்ற மகேஷ், ரயில் நிலைய வாரிய அருகே சிறுநீர் கழித்த காட்சி வீடியோவாக பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியது.

இதனால் அவருக்கு தொடர்ச்சியாக திட்டல் செய்திகள், மிரட்டல்கள் வந்தன. பொது மன்னிப்பு வீடியோ வெளியிட்டும் நிற்காத அவமானத்தால் மனமுடைந்த மகேஷ், நவம்பர் 5 காலை ஜால்னா மாவட்டம் தோக்மல் தாண்டா கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

மகேஷின் குடும்பத்தினரும் உறவினர்களும், வீடியோவை வைரலாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சமூக வலைதளங்களின் தீய விளைவுகளுக்கு மற்றொரு உதாரணமாக இச்சம்பவம் மாறியுள்ளது. வீடியோ பரவிய பின்னர் அவருக்கு வந்த மிரட்டல் செய்திகளால் மன அழுத்தம் ஏற்பட்டதே தற்கொலைக்கு காரணமென குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.