உத்தரப்பிரதேச மாநிலம், ட்ராமண்ட் அரசு இன்டர் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில், ஹரியான்வி பாடகர் குல்ஸார் சன்னிவாலா கலந்துகொண்டபோது, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவிய நிலையில், இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவிகள் மாறி மாறி மோதிக் கொண்ட பகீர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.

 

ஆரம்பத்தில் இளைஞர்களுக்கு இடையே எழுந்த மோதல், நிகழ்ச்சி நிரல் முடிந்த பிறகும் நீடித்தது. அப்போது, நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனம் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பொதுமக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். அவர்களைக் காவல்துறையினர் மீட்டுச் சென்றனர். இந்நிலையில், இரவு சுமார் 10:30 மணியளவில், வளாகத்தின் உள்ளே இரண்டு தரப்பு மாணவிகள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது கைகலப்பாக மாறியது.

இந்தச் சண்டையின் வைரல் வீடியோவில், மூன்று மாணவிகள் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்திழுத்து மோதிக்கொள்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சீரற்ற மோதல்களால் கண்காட்சி வளாகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டதால், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்வாலி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நகர கூடுதல் கண்காணிப்பாளர் தீபக் சதுர்வேதி தலைமையிலான காவல்துறைக் குழுவினர், மேலும் பலம் குவித்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இருதரப்பு மாணவிகளுக்கும் இடையே ஏற்கனவே பழைய விரோதம் இருந்ததாலேயே இந்த மோதல் நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்துத் புகார் அளிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வைரல் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.