பெங்களூரு நியூ திப்பசந்திரா பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், சட்டவிரோதக் கண்காணிப்பில் இருப்பதாக மிரட்டப்பட்டு, சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இணையவழி மோசடியாளர்களிடம் இழந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், கொரியர் சேவை நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஆதார் எண்ணுடன் தொடர்புடைய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாக மிரட்டியுள்ளனர்.
பின்னர் மும்பை காவல்துறை அதிகாரிகள் போலப் பேசிய மோசடியாளர்கள், இந்த விவகாரத்தில் கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். தனது 10 வயது மகனும் சிறைக்குச் செல்ல நேரிடும் என அவர்கள் மிரட்டியதால் அச்சமடைந்த அந்தப் பெண், கடந்த 4 மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறாமலும் யாரிடமும் பேசாமலும் மர்ம நபர்களின் பிடியில் இருந்துள்ளார்.
தன்னை நிரபராதி என நிரூபிக்க அந்தப் பெண் தனது வீடு மற்றும் நிலங்களைச் சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு விற்றும், வங்கிக் கடன் பெற்றும் மொத்தம் 22 தவணைகளாக இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
இறுதியில் தடையில்லாச் சான்றிதழ் பெறக் காவல் நிலையம் வருமாறு அவர்கள் கூறியதையடுத்து, ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்திற்குச் சென்றபோதே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சைபர் குற்றங்களால் இழக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இத்தகைய போலியான அழைப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
