கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் சுரேஷ்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கீழ் சிதம்பரம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செவி கேட்டு திறன் குறைவாக இருந்துள்ளது. நேற்று சுரேஷ் விற்பனை பணத்தை தலைமை அலுவலகத்தில் செலுத்திவிட்டு நியாயவிலை கடைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சிதம்பரம்- கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அதே சமயம் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சுரேஷ் மீது மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.