ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மண்ணாதம்பாளையம் பகுதியில் மீனா தன் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மீனாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி யுவராஜின் தாயார் சித்ராதேவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சித்ராதேவி மருத்துவமனைக்கு சென்று மகளைப் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மீனாவை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். இதனால் மீனாவின் தாயார் சித்ராதேவி உட்பட உறவினர்கள் மீனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். அவர்கள் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்‌. அவர்கள் மீனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதோடு இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.