இந்தியாவில் 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக 31,000 புகார்கள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளது. இது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக இருப்பதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மகளிர் ஆணையத்தால் 30,864 புகார்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த வருடம் 30,957 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9710 புகார்கள் பெண்களின் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை சம்பந்தப்பட்டது. அதன் பிறகு 6,970 புகார்கள் குடும்ப வன்முறை மற்றும் 4600 புகார்கள் வரதட்சணை சம்பந்தப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 16,872 (15.5%) புகார்கள் பெறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 3004 புகார்களும், மகாராஷ்டிராவில் 1381 புகார்களும், பீகாரில் 1368 புகார்களும், ஹரியானாவில் 1362 புகார்களும் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்திரபிரதேச மாநிலத்தில் கண்ணியத்துடன் வாழும் உரிமை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளது. மேலும் 2523 புகார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அல்லது பாலியல் வன்கொடுமைகள், 1701 புகார்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி, 1623 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையின் அக்கறையின்மை, 924 புகார்கள் சைபர் குற்றங்கள் தொடர்பானவை என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.