லடாக்கின் பயண அழகில் திளைத்த ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் கமியா ஜானி, உயரமான மலைப்பகுதியில் தனது உடல் எதிர்கொண்ட சவால்களை இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அதாவது 11,500 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு, மும்பையில் உள்ள 100%-ஐ ஒப்பிடும்போது 60-65% மட்டுமே இருக்கிறது.

இந்த திடீர் மாற்றத்தால், கமியாவுக்கு ஆக்யூட் மவுன்டைன் சிக்னஸ் (AMS) ஏற்பட்டது. உயரமான இடங்களுக்கு வேகமாகப் பயணிக்கும்போது, உடல் ஆக்ஸிஜன் குறைவை சமாளிக்க முடியாமல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. “அக்லமைடைசேஷன் மிக முக்கியம்; 24-48 மணி நேரம் உடலை பழக்கப்படுத்தாமல் பயணம் செய்யாதீர்கள்” என்று கமியா தனது பதிவில் வலியுறுத்துகிறார்.

உணவு தேர்விலும் கவனம் தேவை என்கிறார் கமியா. மலையில் சூடான மேகி, மோமோஸ் சாப்பிட ஆசைப்பட்டாலும், கனமான உணவுகள் உடலை மேலும் சோர்வடையச் செய்யும். முதல் 48 மணி நேரம் எளிமையான, லேசான உணவுகளை மெதுவாக உண்ண பரிந்துரைக்கிறார்.

அதேபோல், ஓய்வு எடுப்பது சோம்பேறித்தனம் அல்ல, உயிர் வாழ உதவும் என்று எச்சரிக்கிறார். லடாக்கின் மடாலயங்கள், ஏரிகள், பனி மூடிய பள்ளத்தாக்குகளை ஆர்வமாக சுற்றிப்பார்க்க நினைத்தாலும், உடலை அதிகம் அழுத்துவது AMS அறிகுறிகளை மோசமாக்கும்.

இருப்பினும், கமியா தனது பயணத்தை பாங்காங் ஏரியின் அமைதியிலும், பிரார்த்தனைக் கொடிகளின் அசைவிலும் மகிழ்ந்தார். இது ஒரு சரியான பயண டைரி இல்லையெனினும், இந்த அனுபவம் அவருக்கு ஒரு பணிவான பாடமாக அமைந்தது என பதிவிட்டார்.