புனேயில் (Pune) நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையின் போது, ஒரு மருத்துவர் அவசரத்தில் நோயாளி ரூபாலி குக்கடேவின் வயிற்றில் அறுவைசிகிச்சை துணியை கவனக்குறைவாக விட்டுச் சென்றதால், ஒரு பெண்ணின் உயிர் பறிபோன சோகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

​2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரண்டாவது குழந்தைக்காக அனுமதிக்கப்பட்ட ரூபாலிக்கு சிசேரியன் செய்யப்பட்டபோது, வயிற்றைத் தைக்கும் நேரத்தில் துண்டு துணி உள்ளே விடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாகத் துணியை வெளியே எடுக்க மீண்டும் அறுவைசிகிச்சை செய்யவேண்டி வந்தது. இந்தக் குழப்பத்தில், ரூபாலிக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டு, நிலைமை மோசமானது. பிறகு மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த ரூபாலி, மே 1, 2011 அன்று உயிரிழந்தார்.

​கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தற்போது மாநில நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரூபாலியின் கணவர் பிரஷாந்த் தொடர்ந்த வழக்கில், மருத்துவ அலட்சியம் நிரூபிக்கப்பட்டதால், மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் தீபலட்சுமி ராக்டே ஆகியோர் ரூபாலி குடும்பத்திற்கு ரூ. 26.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தாமதமானாலும், இந்தத் தீர்ப்பு மருத்துவச் சேவைகளில் பொறுப்புணர்வை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.