பாகிஸ்தானில் உள்ள ஆடு மற்றும் மாட்டுச் சந்தை ஒன்றில், ஒரு பெண் தொலைக்காட்சிச் செய்தியாளர் நேரலைச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காளை மாடு ஒன்று அவரை முட்டித் தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பண்டிகைக் காலத்தையொட்டி கால்நடைகளின் விலைத் தகவல் சேகரிக்கச் சென்ற அந்தச் செய்தியாளர், சந்தைக்குள் வணிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு காளைகள் வேகமாக ஓடி வந்துள்ளன.

அப்போது, அவற்றில் ஒரு காளை அந்தச் செய்தியாளரை வேகமாக முட்டியதில், அவர் அலறியடித்துக்கொண்டு தரையில் விழுந்தார். இந்தப் பரபரப்பான சம்பவத்தின்போது, செய்தியாளரின் மைக், காளையின் கொம்பில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அந்தச் செய்தியாளர் காயமின்றித் தப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் 6 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இணையப் பயனர்கள் பலர் இதற்குக் கேலியும் கிண்டலுமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.