மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டம், பிகன்காவ் பகுதியில் உள்ள பலாசி கிராம துர்கா கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், கர்பா நடனத்தில் ஈடுபட்டிருந்த புதுமணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

கணவருடன் ஆட்டம் ஆடியபடியே, 19 வயதான சோனம் என்பவர் திடீரென தரையில் சரிந்து விழுந்துள்ளார். இருவரும் கடந்த மே மாதம் திருமணமான புதுமண தம்பதியாகும்.

தொடர்ந்து அந்த காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், சோனம் தனது கணவர் கிருஷ்ணபாலுடன் நடனமாடுகிறார். திடீரென சோனம் கீழே விழ, பார்வையாளர்கள் முதலில் அதை நடனத்தின் ஒரு பகுதியென நினைத்து சிரித்தனர்.

ஆனால் சில விநாடிகளில் அவர் அசைவின்றி கிடப்பதை கண்டதும் பீதியில் மக்களும், அவரது கணவரும் பரபரப்புடன் நெருங்கினர். மருத்துவ உதவி கிடைக்கும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், இது மாரடைப்பு எனத் தெரிவித்து உள்ளனர். சோனத்திற்கு இதற்கு முன்பு எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இளமையில் மாரடைப்பு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், அறிவிக்கப்படாத இதய கோளாறுகள் சில நேரங்களில் பெரும் உடற்பயிற்சி அல்லது ஆட்டங்களால் தூண்டப்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர். இந்த சோகமான சம்பவம், திருவிழா கொண்டாட்டங்களில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.