அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மேட் ஷார்ட் தனது வீட்டில் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்டவசமான மற்றும் வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தக் காணொளியில், மேட் ஷார்ட் தனது மனைவியுடன் அமர்ந்திருக்க, அருகில் அவரது சிறு குழந்தை பொம்மை கோல்ஃப் மட்டையுடன் விளையாடுவதைக் காண முடிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அக்குழந்தை அந்த மட்டையைச் சுழற்றியதில், அது மேட் ஷார்ட்டின் மர்ம உறுப்பில் பலமாகத் தாக்கியது.

 

இதில் நிலைகுலைந்து போன அவர் வலியால் துடித்த நிலையில், அருகில் இருந்த அவரது மனைவி தடுக்க முயன்றும் அந்த விபத்தைத் தவிர்க்க முடியவில்லை. இதைப் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், திரையில் இதைப் பார்க்கும்போதே வலிப்பதாகக் கூறி அவரது நலன் குறித்துப் பதிவிட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த வீரரின் நிலைமையைக் கண்டு வருத்தப்பட்டாலும், மழலைகளின் இத்தகைய குறும்பான செயல்களைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.