தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 10 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் ஒருவரின் 10 வயது மகளான சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஹாஸ்ரா வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலையிலிருந்து திரும்பிய தந்தை, வீட்டில் ரத்த வெள்ளத்தில் மகள் சடலமாக கிடந்ததை கண்டு சோகத்திலும் அதிர்ச்சியிலும் துடித்துள்ளார்.
உடனடியாக தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர் விசாரணையில், சிறுமியின் உடலில் 21 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அருகிலுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வீடியோக்கள் சேகரிக்கப்பட்டன.
நான்கு நாட்கள் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், பக்கத்து வீட்டு 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், “சஹாஸ்ராவின் வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டை திருட தான் சென்றேன். அந்த நேரத்தில் நான் கத்தி எடுத்துச்சென்றிருந்தேன். என்ன செய்றதுன்னு தெரியாமல் கத்தியால் குத்திட்டேன்” எனக் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஒரு கிரிக்கெட் பேட்டை திருடவே ஒரு சிறுமியின் உயிரை பறிக்கின்ற அளவுக்கு மனநிலை எதனால் உருவானது? சிறுவன் ஏன் கத்தியுடன் சென்றான்? அவர் மனநிலை குறித்து மேலும் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகளிடையே பெருகும் வன்முறை மனப்பான்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த கொலை நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
