கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இருக்கும் கடைகளில் கடந்த 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் மாம்பழம், சாத்துக்குடி, வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை செயற்கை முறையில் பழுக்க வைக்கின்றனர்.

அந்த பழங்களை சாப்பிட்டால் கண் எரிச்சல், வாந்தி, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தற்போது கோவை மாவட்டத்தில் 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 30 சில்லறை விற்பனை கடை உரிமையாளர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. எனவே தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.