ஒடிசாவில்  ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி கவிழ்ந்த நிலையில், அதன்மீது யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது..

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக முதல்வர் அவர்கள் துரிதமாக உடனடியாக செயல்பட்டு, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி தமிழக பயணிகளை மீட்க விரைவான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்படி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஒடிசாவின் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கை புவனேஸ்வரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி, விபத்தில் காயமடைந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டு உரிய சிகிச்சை வழங்க  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கேட்டுக்கொண்டனர்..

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். அதில், ஒடிசாவில் நேற்று (2ஆம் தேதி) ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்..