2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக தசுன் ஷானகா தேர்வு செய்யப்பட்டார். தொடை காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகிய நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தார்.

அவருடன் மகீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க ஆகியோரும் ரீஎண்ட்ரி செய்தனர். ஆனால் இந்த மூவரும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே போட்டியில் தொடருவார்கள். இதில் எந்தவொரு வீரரும் சரியான நேரத்தில் குணமடைய தவறினால்  ரிசர்வ் பட்டியலில் உள்ள தசுன் ஹேமந்த மற்றும் சாமிக்க கருணாரத்னேவை அணியில் சேர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

மெகா போட்டியில் பங்கேற்க இலங்கை அணி வியாழக்கிழமை (28ஆம் தேதி) இந்திய மண்ணில் நுழையும் எனத் தெரிகிறது. பின் அவர்கள் செப்டம்பர் 29 அன்று கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வங்கதேசத்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள். உலக கோப்பையின் முக்கிய போட்டியில், இலங்கை தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி டெல்லியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு தசுன் ஷானகா கேப்டனாகவும், குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா & தில்ஷான் மதுஷங்க ஆகியோரின் தேர்வு உடற்தகுதிக்கு உட்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இலங்கை அணி :

தசுன் ஷானகா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), பதும் நிஷாங்கா, குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன, சரித்அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, மதீஷ பத்திரனா, லஹிரு குமாரா, வனிந்து ஹசரங்கா*, மஹீஷ் தீக்ஷனா* மற்றும் தில்ஷான் மதுஷங்க*

காத்திருப்பு வீரர்கள் : துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரத்ன