இது எனது சதமா அல்லது வேறொருவரின் சதமா என்பது முக்கியமில்லை, ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதே மிக முக்கியமானது என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கோப்பை 2023 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மெகா நிகழ்வு அக்டோபர் 5 முதல் தொடங்கப் போகிறது. இந்தமுறை இந்தியா உலகக் கோப்பையை நடத்துகிறது, எனவே உலகக் கோப்பை 2023 இல் ரோஹித் சர்மா மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். ரோஹித் ஷர்மா தலைமையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியன் ஆவதை ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ரோஹித் சர்மாவின் தலைமையில் ரசிகர்களும், அணி நிர்வாகமும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த முறை 2023 உலகக் கோப்பைக்கு இந்தியா ஒரு பெரிய போட்டியாளராகக் கருதப்படுகிறது.  உலகக் கோப்பைக்கு முன், டீம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பிசிசிஐ தனது மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளித்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்  பத்திரிகையாளர் விமல் குமார் ரோஹித்துடனான தனது நேர்காணல் பிரிவின் ஒரு பகுதியை யூடியூப்பில் வெளியிட்டார், அதில், 2019 உலகக் கோப்பை ஆட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் எதிர்பார்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது, ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடும் பதிலளித்தார். அவர் அந்த சாதனையை நிகழ்த்திய போதும், அணி கோப்பையை வெல்லவில்லை என்று   நினைவூட்டினார். மேலும், உலகக் கோப்பை கோப்பையை இந்தியா வெல்வதில் கவனம் செலுத்தப்படுவதால், போட்டியில் யார் எத்தனை சத்தங்கள் அடித்தார்கள் என்பதில் தான் அக்கறை காட்டவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

ரோஹித் கூறியதாவது, “2019 உலகக் கோப்பையில் அதுதான் நடந்தது. நான் நன்றாகச் செயல்பட முயற்சிப்பேன், நல்ல மனநிலையில் இருக்க முயற்சிப்பேன். அந்த ஆண்டு நான் நன்றாகப் பயிற்சி செய்தேன். இந்த ஆண்டும் அதைத்தான் நான் விரும்புகிறேன். ஆனால் மீண்டும் அது 2019, இப்போது 2023 ஆம் ஆண்டு. கடந்த காலத்தில் நடந்ததைப் போலவே விஷயங்களையும் விரும்புகிறோம். ஆம் நான் கடந்த முறை 5 சதங்கள் அடித்தேன், ஆனால் நாங்கள் உலகக் கோப்பையையும் இழந்தோம். எனவே 2019 உலகக் கோப்பையைப் போல நடக்கக்கூடாது. நான் 1 சதம் அடித்தாலும் சரி, 2 சதம் அடித்தாலும் சரி, அல்லது ஒரு சதம் அடிக்கவில்லை என்றாலும் சரி எனக்கு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அதுவே எங்கள் முக்கிய குறிக்கோள். யார் எத்தனை சதங்கள் அடித்தார்கள் என்பது முக்கியமில்லை, இது எனது சதமா அல்லது வேறொருவரின் சதமா என்பது முக்கியமில்லை. உலகக் கோப்பையை வெல்வதில் நமது முழு கவனமும்  செலுத்தப்பட வேண்டும். உலகக் கோப்பை கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் அது நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும்,”என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இந்தியா 1983ல் கபிலதேவ் தலைமையிலும் மற்றும் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் ஒருநாள் உலக கோப்பையை வென்று பெருமையை சேர்த்த இந்தியா, 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் நோக்கத்தில் உள்ளது. ஆனால் மிக முக்கியமாக, ஐசிசி கோப்பைக்கான இந்தியாவின் 10 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்த உலக கோப்பையில் முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா என்பதை பார்க்க வேண்டும், கடைசியாக 2013 இல் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா 2019 உலகக் கோப்பையில் சிறந்த மற்றும் மறக்கமுடியாத பேட்டிங் செய்திருந்தார், மேலும் அந்த தொடரில் ஒரு  சாதனையை செய்தார். தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு எதிராக அவர் 5 சதங்களை அடித்தார். 9 போட்டிகளில், 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்தார், மூத்த இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குமார் சங்கக்கராவின் 2015 உலகக் கோப்பையின் 4 சதங்கள் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா. ஆனால் 2019ல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை..