தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொள்கை விளக்கப் பணிகளுக்காக, சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

ஏற்கனவே கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைக் குறிப்பிட்டு, சேலம் கூட்டத்திற்கும் காவல்துறை பல்வேறு கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை விதித்துள்ளது.

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் போஸ் மைதானம் உள்ளிட்ட சில இடங்கள் கோரப்பட்டன. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அந்த இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

முதலில் டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்ட இந்தக் கூட்டம், கார்த்திகை தீபம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினப் பாதுகாப்புப் பணிகளால் தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 13-ம் தேதி கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, வாகன நிறுத்தம், ஆம்புலன்ஸ் வசதி என காவல்துறை அடுக்கியுள்ள நீண்ட பட்டியல் தவெக நிர்வாகிகளைத் திணறடித்துள்ளது.