தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே கட்சித் தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதியம் 12 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வில், குறுகிய காலத்திற்குள்ளேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, விநியோகம் தொடங்கிய வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விருப்ப மனுக்களும் தீர்ந்து போயின. எதிர்பார்த்ததை விடவும் பன்மடங்கு அதிகமான தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகள் திணறினர்.

மேலும் மனுக்கள் கையிருப்பு இல்லாததால், தற்காலிகமாக விநியோகம் நிறுத்தப்பட்டு, கட்சி அலுவலகம் மூடப்பட்டது. அங்கிருந்த தொண்டர்களை நாளை வருமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் தேர்தல் பணிகளில் தொண்டர்கள் காட்டிய அதீத ஆர்வம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.