ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருந்ததால் நாங்கள் அதை நிராகரித்து விட்டோம். இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப் போகிறோம்” என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிராச்சி தோக், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அந்நபர் உங்கள் ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தி அனுப்பி இருக்கக்கூடும் எனவும் இந்த விவகாரத்தில் உங்களுக்கு தொடர்பில்லை என்று நிரூபிக்க தாங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதன்பின் இப்பிரச்சனையை தீர்த்து வைக்க ரிசர்வ் வங்கிக்கு ரூபாய்.95,499 கட்ட வேண்டும் எனக் கூறி அவரிடம் இருந்து ஆன்லைன் வாயிலாக பணம் பெற்றுள்ளார் அந்த நபர். மேலும் பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் இருந்து 4 பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.6,93,437 பணம் வாங்கியுள்ளார் அந்த நபர். இதற்கிடையில் தான் ஏமாறப்பட்டதை உணர்ந்த பிராச்சி தோக் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.