பெங்களூரு சககார நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடைபாதையில் நடந்து சென்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஒரு வணிக வளாகத்தின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென இடதுபுறம் திரும்பி நடைபாதையில் ஏறி அந்தப் பெண் மீது மோதியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் தலைமையில் சுமார் 20,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், இத்தகைய விபத்து நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.